ஹைப்பர்லூப் தொழில்நுட்ப அறிவுசார் சொத்துரிமை: சென்னை ஐஐடி - ட்யூடர் இணைந்து செயல்பட முடிவு

11 months ago 108

சென்னை: சென்னை ஐஐடி மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான TuTr, ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமைக்காக இக்கல்வி நிறுவனத்துடன் (சென்னை ஐஐடி) இணைந்து செயல்பட உள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'TuTr Hyperloop' இக்கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கும் பணியில் இணைந்து செயல்படுகிறது. ஹைப்பர்லூப் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்துடனும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ளது.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் அமைப்பு முறைகளை உருவாக்கி மேம்படுத்துவதற்காக பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய இந்திய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'TuTr Hyperloop' நிறுவனம் சென்னை ஐஐடி உடன் அண்மையில் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சென்னை ஐஐடி-யில் அமைந்துள்ள நேஷனல் சென்டர் ஃபார் கம்பஷன் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் (NCCRD)-ல் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 'TuTr Hyperloop' ஒரு டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இயங்கி வருகிறது. புத்தாக்க மையமான டீம் ஆவிஷ்கார் செயல்படுத்திவரும் பணிகளை முன்னெடுத்துச் செல்லவும், ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தவும் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

இந்த கூட்டு முயற்சி குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி-யின் என்சிசிஆர்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்தி, "பிற போக்குவரத்து சாதனங்களோடு ஒப்பிடும்போது குறைந்த செலவில், அதே நேரத்தில் பசுமை சார்ந்த வகையில் வாடிக்கையாளர்களின் 'தேவைக்கு ஏற்ப' நம்பகமான போக்குவரத்தை வழங்குவதே TuTr-ன் நோக்கமாகும். ஐஐடி மெட்ராஸ் உடனும், இந்தியாவின் மிகப்பெரிய டீப்டெக் சுற்றுச்சூழல் அமைப்புடனும் இணைந்திருப்பதன் வாயிலாக குறைந்த செலவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி விண்வெளிப் பொறியியல் துறையின் ஆசிரியராகவும் பணியாற்றிவரும் பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்தி மேலும் கூறும்போது, "சரக்குப் போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளைக் களைந்து தொடர்புடையவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் ஆரம்பகட்டமாக அதில் முழு கவனம் செலுத்தப்படும். இந்தியாவிலும், உலக அளவிலும் பயணிகள் போக்குவரத்துக்காக அதிவேக இயக்க வழித்தடங்களை உருவாக்குவதில் இப்பணிகள் ஒரு தொடக்கமாக அமையும்" என்றார்.

ஐரோப்பா- இந்தியா ஹைப்பர்லூப் கூட்டு ஒத்துழைப்பு: ஐரோப்பா- இந்தியா இடையே 'இயக்கத்திற்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்ப'த்தை மேம்படுத்தும் விதமாக முன்னணி ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனமான 'Hardt Hyperloop' நிறுவனத்துடன் 'TuTr Hyperloop' உத்திசார் கூட்டாண்மையை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் நெதர்லாந்து உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் மார்க் ஹார்பர்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பரிசோதித்தல், அபாயங்களைக் களைதல், பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் ஆகிய பணிகளை கூட்டு முயற்சியுடன் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசிய நெதர்லாந்து உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் மார்க் ஹார்பர்ஸ், "Hardt மற்றும் TuTr நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு நேர்மறையான வளர்ச்சியாகும். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் என தொடக்க காலத்தில் இருந்தே நெதர்லாந்து உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தி வருகிறது. ஹைப்பர்லூப் போன்ற நீடித்த முன்னோடிப் போக்குவரத்து தீர்வுகளுக்கு கூட்டாண்மை எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதற்கு உதாரணமாக, ஹைப்பர்லூப் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி அமைந்துள்ளது" என்றார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, TuTr மற்றும் Hardt ஆகியவை ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்த விவாதங்களை மேற்கொள்ளும். 2030-ம் ஆண்டு வாக்கில் சோதனை முறையிலான இயக்கத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இலக்கை நோக்கி திட்டமிடல் உருவாக்கப்படும். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், வணிகரீதியான பயன்பாட்டை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவும் இந்த கூட்டாண்மை துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TuTr Hyperloop-ன் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான டாக்டர் அரவிந்த் பரத்வாஜ், "இந்தியாவில் குறைந்த செலவில் நீடித்த அதிவேக இயக்கத் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்க ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் அமைப்பின்கீழ் TuTr Hyperloop ஆத்மநிர்பர் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்திய-ஐரோப்பிய கூட்டு முயற்சியில் Hardt நிறுவனத்துடன் இணைந்து செயல்படக் கூடிய ஹைப்பர்லூப் அமைப்பு முறைக்கான பொதுவான தரநிலைகளை உருவாக்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இதன் மூலம் கிடைக்கப் பெறும் தீர்வானது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்" எனத் தெரிவித்தார்.

ஹார்ட் ஹைப்பர்லூப் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை வணிக அதிகாரியுமான மார்ஸ் கியூஸ், "இந்திய-ஐரோப்பிய கூட்டு முயற்சியில் இரு ஹைப்பர்லூப் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வரவேற்கிறோம். இதன் மூலம் எல்லைகளைக் கடந்த தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்கப்படும். இயக்கத்திற்கான ஹைப்பர்லூப் அமைப்பு முறையை உறுதிசெய்வதன் மூலம் உள்நுழைவுக்கான தடைகள் குறைவதுடன், அதிநவீனத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறோம். TuTr உடனான எங்கள் கூட்டு முயற்சி, உலக அளவிலான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை மேலும் விரிவாக்கம் செய்ய உதவுகிறது. அத்துடன் உலகெங்கும் உள்ள மக்களுக்கு அதிவேக, நீடித்த போக்குவரத்தை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றவும் முடியும்" என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஹைப்பர்லூப் தொழில்நுட்ப நிறுவனமான ஹார்ட், ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களை உருவாக்கி விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெதர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனைக்கான தொழிற்சாலைகளில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையத்திடம் முதலீட்டிற்கான உறுதிப்பாட்டைப் பெற்றுள்ள இந்நிறுவனம், ஐரோப்பாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தும் நோக்குடன் ஐரோப்பிய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.